ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிள்ளான் மருத்துவமனைக்கு அமைச்சர் திடீர் வருகை- காத்திருக்கும் நேரத்தை குறைக்க நடவடிக்கை

ஷா ஆலம், டிச 30- சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் வருகை மேற்கொண்டார்.

மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவிக்காமல்  இந்த திடீர் வருகையை மேற்கொண்ட அவர், மருத்துவமனையின் அவசர பிரிவில் சிகிச்சை க்காக காத்திருந்த நோயாளிகளிடம் கலந்துரையாடியதாக மலேசியா கினி இணைய ஊடகம்  செய்தி வெளியிட்டுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவில்  நீண்ட நேரம் காத்திருக்கும் விவகாரம் தொடர்பில் நோயாளிகளின் கருத்தைப் பெறுவதற்காக அமைச்சர் இந்த வருகையை மேற்கொண்டதாக அவரின் உதவியாளர் ஒருவர் மலேசியா கினியிடம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது சிகிச்சைக்காக தாங்கள் நீண்ட நேரம் காத்திருப்பது குறித்து நோயாளிகள் புகார் தெரிவித்ததோடு சுகாதாரத் துறையில் மேம்படுத்தப்பட வேண்டிய சில அம்சங்கள் குறித்து மருத்துவமனை பணியாளர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

சுகாதார மையங்களில் குறிப்பாக அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள அவசரப் பிரிவுகளில் சிகிச்சைக்காக நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய விவகாரத்தை தாம் கடுமையாகக் கருதுவதாக அமைச்சர் ஜலிஹா முன்னதாக கூறியிருந்தார்.

இப்பிரச்னையை களைவதற்காக தமது தரப்பு திட்டத்தை வரைந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


Pengarang :