ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 பரவலைத் தடுக்க சீனப் பயணிகளுக்கு எஸ்.ஒ.பி. விதிகளை முறைப்படுத்துவீர்- மந்திரி புசார் வலியுறுத்து

ஷா ஆலம், டிச 30- சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு ஏதுவாக சீன நாட்டு சுற்றுப் பயணிகள் வருகை தொடர்பான சீரான செயலாக்க நடைமுறையை (எஸ்.ஒ.பி.) முறைப்படுத்தப்பட வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் தாம் உள்துறை அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுடன் பேச்சு நடத்த உள்ளதாக மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிப்பாங்கிலுள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கே.எல்.ஐ.ஏ.) மற்றும் கே.எல்.ஐ.ஏ. 2 ஆகிய விமான நிலையங்கள் வாயிலாக நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு சிலாங்கூர் மாநிலமே பிரதான நுழைவாயிலாக விளங்குவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது என்று அவர் தெரிவித்தார்.

கே.எல்.ஐ.ஏ. மற்றும் கே.எல்.ஐ.ஏ.2 ஆகிய விமான நிலையங்கள் சிலாங்கூரில் உள்ள காரணத்தால் இம்மாநிலம் நாட்டின் பிரதான நுழை வாயிலாக திகழ்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு எஸ்.ஓ.பி. விதிமுறைகளை முறைப்படுத்துவது தொடர்பாக உள்துறை அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சருடன் பேச்சு நடத்தவிருக்கிறேன் என்றார் அவர்.

சிலாங்கூர் மக்களுக்கு கோவிட்-19 பெருந்தொற்றினால் எதிர்விளைவுகள் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய நாட்டிற்கு வரும் சீன சுற்றுப் பயணிகளுக்கு எஸ்.ஒ.பி.விதிமுறைகளை நிர்ணயிப்பது அவசியம் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் ஷங்காய் அருகே உள்ள பெரும் தொழில்துறை பிரதேசமான ஷெங்ஜியாங் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளது தொடர்பில் அமிருடின் இவ்வாறு கருத்துரைத்தார்.

இந்த பிரதேசத்தில் தினசரி பத்து லட்சம் கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகி வருவதோடு ஓரிரு தினங்களில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.


Pengarang :