ECONOMYMEDIA STATEMENTNATIONAL

விஸ்மா ஜாக்கெலில் மீண்டும் தீவிபத்து- சதிநாசச் செயலுக்கான சாத்தியம் குறித்தும் தீயணைப்புத் துறை விசாரணை

ஷா ஆலம், ஜன 3- இங்குள்ள செக்சன் 7, விஸ்மா ஜாக்கெலில் மீண்டும் ஏற்பட்ட தீ விபத்துக்கு சதிநாசச் செயல் அல்லது அணைக்கப்படாத தீப்பொறி காரணமாக இருக்கும் சாத்தியத்தை மையமாக கொண்டு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

எனினும், விரிவான தகவல்களைப் பெறுறவதற்கு ஏதுவாக தங்களின் விசாரணை அனைத்து கோணங்களையும் உள்ளடக்கியதாகவும் ஆழமானதாகவும் இருக்கும் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் டத்தோ நோராஸாம் காமிஸ் கூறினார்.

துணிகளுக்கு அடியில் அணைக்கப்படாமல் இருந்த தீப்பொறி குறித்தும் குறித்தும் நாங்கள் விசாரித்து வருகிறோம். இந்த விபத்துக்கு அணைக்கப்படாத தீப்பொறி காரணமாக இருக்கலாம் அல்லது யாராவது வேண்டுமென்றே தீ மூட்ட முயன்றிருக்கலாம் என்றார் அவர்.

இவை தவிர, இதர அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படும் என்பதோடு ஆழமாக விசாரிக்கப்படும். இரண்டாவது தீச்சம்பவம் தொடர்பில் இதுவரை எந்த முடிவுக்கு வர இயலவில்லை என்று சம்பவ இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் தெரிவித்தார்.

சாட்சிகளை விசாரிப்பது, விசாரணை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு தங்களுக்கு 14 நாள் அவகாசம் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த தீவிபத்துக்கான காரணமாக இருந்திருக்கக்கூடிய பொருளை அடையாளம் காண்பதற்காக இரு மோப்ப நாய்களின் சேவையும் இன்று பயன்படுத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்தில் திரட்டப்பட்ட மாதிரிகள் புக்கிட் ஜெலுத்தோங்கில் உள்ள எங்களின் விசாரணை ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். அதேசமயம், விஸ்மா ஜாக்கெலில் மின் கம்பிகள் மற்றும் மின்சாதனங்கள் மீதும் சோதனை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

விஸ்மா ஜாக்கெல் கட்டிடத்தில் இன்று பின்னிரவு 12.40 மணியளவில் இரண்டாவது முறையாக தீவிபத்து ஏற்பட்டது.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 3.07 மணியளவில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

கடந்த 1ஆம் தேதி காலை 7.08 மணியளவில் ஏற்பட்ட முதலாவது தீச்சம்பவத்தில் இக்கட்டிடத்தின் 80 விழுக்காட்டுப் பகுதி சேதமடைந்தது.


Pengarang :