ECONOMYMEDIA STATEMENTNATIONAL

உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்போம், நாட்டின் பொற்காலத்தை மீட்டெடுப்போம்- அன்வார்

ஷா ஆலம், ஜன 7- உலக நாடுகள் மத்தியில் கௌரவத்தைப் பெற்றிருந்த  பொற்காலத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக உள்நாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தாம் முழு கவனம் செலுத்தவுள்ளதாகப் பிரதமர் கூறினார்.

மக்கள் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு, வீட்டுடைமை, வேலை வாய்ப்பு மற்றும் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை  உள்ளிட்ட விவகாரங்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது பெரும் எதிர்பார்ப்புடன் பல இஸ்லாமிய நாடுகள் என்னைத் தொடர்பு கொண்டன. அவற்றில் மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகளும் சீனாவும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

அனைத்துலக விவகாரங்களில் நாமும் ஒரு அங்கமாக இருக்கிறோம் என்பதை இது புலப்படுத்துகிறது. இருந்த போதிலும் எனது இலக்கு உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தையே மையமிட்டுள்ளது. இதில் முழு கவனத்தையும் செலுத்த விரும்புகிறேன் என்றார் அவர்.

நேற்றிரவு ஆர்.டி.எம்.மில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட பிரதமருடனான சிறப்ப நேர்காணல் நிகழ்வில் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, மற்றொரு விவகாரம் குறித்து பேசிய அன்வார், தலைவர் என்ற முறையில் தமக்குள்ள ஆற்றல் குறித்து கேள்வியெழுப்பும் வகையில் அவதூறு பரப்பும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக விளக்கினார்.

இதனை சமயத்தின் போர்வைக்குள்  மறைந்து கொண்டு செய்யும் போது இதனை அவதூறு அன்றி வேறு என்னவென்று சொல்வது என கேள்வியெழுப்பினார்.

தம்மை ஒழுக்கமற்ற நபர் என குற்றஞ்சாட்டியது தொடர்பில் கெடா மந்திரி புசார் டத்தோ முகமது சனுசி முகமது நோருக்கு எதிராக அன்வார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

முன்பு சிலாங்கூர் மாநில  பொருளாதார ஆலோசகராக இருந்த போது ஒன்றரை கோடி வெள்ளியை ஊதியமாகப் பெற்றதாக குற்றஞ்சாட்டிய முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினுக்கு எதிராகவும் அன்வார் மானநட்ட வழக்கு தொடுத்துள்ளார்.


Pengarang :