ECONOMYPBT

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பொது இடங்களில் குப்பைத் தொட்டிகள்- எம்.பி.எஸ்.ஏ. ஏற்பாடு

ஷா ஆலம், ஜன 7 - வரவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு 362 இடங்களில் ரோல்-ஆன்-ரோல்-ஆஃப் (ரோரோ) எனப்படும்  லோரி மூலம் அகற்றப்படும் குப்பைத் தொட்டிகளை  ஷா ஆலம் மாநகர் மன்றம் இலவசமாக வழங்கும்.

மூன்று டன் கொள்ளளவு கொண்ட இந்த ரோரோ குப்பைத் தொட்டிகளை முக்கிய இடங்களில் வைக்கும் பணி நேற்று துவங்கி ஜனவரி 16ம் தேதி வரை தொடரும் என  மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு குப்பைத் தொட்டியும் ஒவ்வொரு இடத்திலும் ஏழு நாட்களுக்கு வைக்கப்படும். தொட்டிகள் விரைவாக நிரம்பி விட்டால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே அவை அப்புறப்படுத்தப்படும்.

தொட்டிகளில் பழைய அலமாரிகள், மேஜைகள், படுக்கைகள், மெத்தைகள் போன்ற பயன்படுத்தப்பட்ட தளவாடங்களை வீசலாம். 

இரும்பு அல்லது கண்ணாடி போன்ற ஆபத்தான பொருள்கள் துப்புரவுப் பணியாளர்களுக்கு  காயம் ஏற்படாத வகையில் பாதுகாப்பான பொருள்களால் நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மாநகர் மன்றம்  தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

ரோரோ குப்பைத் தொட்டி  சேவை தொடர்பான எந்த விபரங்களை மாநகர் மன்றத்தின் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரத் துறையை 03-55105133 ext 1239/1316/1547/1645/1695/1697 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Pengarang :