ECONOMYMEDIA STATEMENT

உணவப் பணியாளரை பலி கொண்ட வெடிப்புச் சம்பவத்திற்கு தனிப்பட்ட தகராறே காரணம்- போலீஸ் விளக்கம்

கோலாலம்பூர், ஜன 7- உணவக பணியாளர் உயிரைப் பலி கொண்ட பண்டான் இண்டா வெடிச் சம்பவத்திற்கு உயிரிழந்தவருக்கும் சந்தேகப் பேர்வழிகளுக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறே காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இக்கொலையில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 33 வயது ஆடவர் மற்றும் 30 வயதுடைய அவரின் மனைவி இருவருக்கும் கொலையுண்ட வருக்கும் இடையே கெடாவில் உள்ள கிராமத்தில் இருந்த காலந்தொட்டு அறிமுகம் இருந்து வந்ததாக சிலாங்கூர் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ எஸ். சசிகலா தேவி கூறினார்.

எனினும், இக்கொலைக்கு பொறாமை காரணமா என வினவப்பட்ட போது அது குறித்து கருத்துரைக்க  சசிகலாதேவி மறுத்து விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 36 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். புதிதாக யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும், கணவன், மனையிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

கெடா மாநிலத்தின் செர்டாங்கில் உள்ள சந்தேகப் பேர்வழிகளின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் காகிதம் வெட்டும் கத்தி, பந்து வடிவிலான பட்டாசு உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்று இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சொன்னார்.

இந்த சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் இத்தம்பதியருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 19ஆம் தேதி இரவு அம்பாங், பாண்டான் இண்டாவிலுள்ள உணவகம் ஒன்றின் எதிரே  உள்ள காரின் மீது வைக்கப்பட்டிருந்த பொட்டலத்தை எடுக்க முயன்ற 28 வயது உணவப் பணியாளர் அப்பொட்டலத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் சிக்கி உயிரிழந்தார்.


Pengarang :