ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பிரதமருடன் கோலாலம்பூர் டத்தோ பண்டார் சந்திப்பு- அங்காடி வணிகர்களின் மேம்பாடு குறித்து பேச்சு

கோலாலம்பூர், ஜன 12- கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ மஹாடி சே ஙா பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நேற்று புத்ரா ஜெயாவிலுள்ள நிதியமைச்சில் சந்தித்தார். மாநகர் மன்றத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டுத் துறை இயக்குநர் டத்தோ அஸ்மி அப்துல் ஹமிட்டும் இச்சந்திப்பின் போது உடனிருந்தார்.

கோலாலம்பூரில் உள்ள அங்காடி வியாபாரிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பரிந்துரை உள்ளிட்ட விவகாரங்களை மஹாடி இச்சந்திப்பில் முன்வைத்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்கினை ஆற்றும் தரப்பினராக அங்காடி வியாபாரிகளும் சிறு வணிகர்களும் விளங்கி வருகின்றனர். மாநகரின் துரித வளர்ச்சி அலையில் அவர்கள் பின்தங்கிவிடாமலிருப்பதை உறுதி செய்ய அவர்களின் முன்னேற்றத்தில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

அங்காடி வியாபாரிகளும் சிறு வணிகர்களும் உகந்த சூழலில் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு முறையான அடிப்படை வசதிகளை ஊராட்சி மன்றங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பிரதமர் முன்னதாக  வலியுறுத்தியிருந்தார்.

தங்களின் வர்த்தக நடவடிக்கையின் வாயிலாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அத்தரப்பினர் பெரும் பங்காற்றி வருவதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது அவசியமாகும் என்றும் அவர் கூறியிருந்தார்.


Pengarang :