ALAM SEKITAR & CUACAPBT

கைவிடப்பட்ட நாய்களைப் பராமரிப்பதில் அரசு சாரா அமைப்புடன் எம்.பி.கே.எல். ஒத்துழைப்பு

ஷா ஆலம், ஜன 12- கைவிப்பட்ட நாய்களை அடைத்து வைக்கும் வளாகங்களை நிர்வகிக்கும் நடைமுறையை கோல லங்காட் நகராண்மைக் கழகம் மேம்படுத்தவுள்ளது.

தங்களின் இந்த முயற்சிக்கு கைவிடப்பட்ட நாய்களை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் அரசு சாரா அமைப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாக நகராண்மைக் கழகத்தின் வர்த்தக மற்றும் மேம்பாட்டுப் பிரிவு கூறியது.

கடந்தாண்டில் 1,153 நாய்கள் பிடிபட்ட வேளையில் அவற்றில் பெரும்பாலானவை நோய்களால் பீடிக்கப்பட்டும் ஊட்டச்சத்து இன்றியும் காணப்பட்டன என்று அது குறிப்பிட்டது.

கைவிடப்பட்ட நாய்களை நகராண்மைக் கழகம் ஒருபோதும் புறக்கணித்ததில்லை. மாறாக, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு (எஸ்.ஒ.பி.) ஏற்ப அவை பராமரிக்கப்படுகின்றன. அந்நாய்களுக்கு காலை, மாலை இருவேளையும் பிரத்தியேக உணவு வழங்கப்படுகிறது என்று நகராண்மைக் கழகம் அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்தது.

பிடிபடும் நாய்களை தங்கள் வசம் உள்ள புகலிடங்களில் அடைக்கலம் கொடுக்க முன்வந்துள்ள சில அரசு சாரா அமைப்புகளின் செயலை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம் என்றும் அது கூறியது.

இம்மாதம் 10ஆம் தேதி 10 நாய்கள் அரசு சாரா அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறிய நகராண்மைக் கழகம், நாய்களை தொடர்ந்து வளர்க்க விரும்பாதவர்கள் அவற்றை சம்பந்தப்பட்ட அமைப்பிடம் ஒப்படைக்கலாம் என்று அது ஆலோசனை கூறியது.

 


Pengarang :