ECONOMYMEDIA STATEMENT

பரம ஏழைகளுக்கு உதவுவதே ஒற்றுமை அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோள்- பிரதமர் திட்டவட்டம்

கோல நெருஸ், ஜன 12- ஏழைகள் குறிப்பாக பரம ஏழைகளின் நலன் காப்பதே ஒற்றுமை அரசாங்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக தொடர்ந்து விளங்கும என்று  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

“ரஹ்மா“ கோட்பாட்டிலான அணுகுமுறை அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களிலும் வலியுறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தர்.

சமூக நலன் சார்ந்த திட்டத்தை நாம் “ரஹ்மா“ என அழைக்கிறோம். ஏழைகள் குறிப்பாக பரம ஏழைகளுக்கு உதவுவதற்கான அனைத்து திட்டங்களிலும் இதனையே கருப்பொருளாக    வைப்போம்.    நடப்பு அரசாங்கம் இத்திட்டத்திற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்று அவர் சொன்னார்.

இன்று இங்குள்ள மலேசிய திரங்கானு பல்கலைக்கழகத்தின் செனட் மண்டபத்தில் மாநிலத்திலுள்ள கூட்டரசு அரசாங்கத்தின் துறைத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பெரிய மற்றும் பிருமாண்ட திட்டங்களுக்கு பதிலாக மக்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம் மற்றும் வெள்ளத் தடுப்பு போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை தாம் உறுதி செய்ய விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களின் சுபிட்சமான நல்வாழ்வை உறுதி செய்வதற்காக எதிர்க்கட்சிகள் வசமிருக்கும் மாநிலங்கள் உள்பட அனைத்து தரப்பினருடன் இணைந்து செயல்பட மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் அவர் சொன்னார்.

மக்களுக்கு சேவை வழங்குவதற்கான முயற்சிகளை மேலும் அதிகரிக்கும்படி மத்திய அரசின் துறைத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

ஆறு மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தல் குறித்து நிருபர்கள் வினவிய போது, அது குறித்து கருத்துரைக்க இன்னும் காலம் கனியவில்லை என்பதோடு அது மாநில நிலையிலான விவகாரமாகும் என்றார்.

அனைத்து மாநிலங்களில் ஏக காலத்தில் தேர்தலை நடத்தினால் சிறப்பாக இருக்கும். எனினும், அது எனது அதிகார வரம்பிற்குட்பட்டது அல்ல என அவர் தெரிவித்தார்.


Pengarang :