ALAM SEKITAR & CUACAECONOMY

மளிகைக் கடையில் கொள்ளை அடித்த மூவர் கைது

கோலாலம்பூர், ஜனவரி 15 – கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஜாலான் எங்காங், தாமான் கிராமாட்டில் உள்ள ஒரு மளிகைக் கடையில் 5,000 வெள்ளி  கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இரவு 9.25 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் சுங்க அதிகாரிகள் எனக் கூறிக் கொண்ட மூன்று சந்தேக நபர்களும் கடையில் சோதனை நடத்துவது போல் நடித்து பணத்துடன் தப்பிச் சென்றதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமது  ஃபாரூக் எஷாக் கூறினார்.

இருப்பினும், 35 வயதுடைய சந்தேக நபர்களில் ஒருவனை பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்  பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாக அவர் சொன்னார். கார் உபரிபாக விற்பனை  கடை உதவியாளரான சந்தேக நபர், போதைப்பொருள்  குற்றங்கள் உட்பட மூன்று முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டிருப்பது முதல் கட்ட சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதை ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

மேலும் கொள்ளையின் போது பயன்படுத்தியதாக நம்பப்படும்  கத்தி, துணிகள் மற்றும் வாக்கி டாக்கி செட் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. நேற்று இரவு 8.45 மணி முதல் 9.50 மணி வரை கோத்தா வாரிசன் அடுக்குமாடி குடியிருப்பு, செலாயாங் மற்றும் பண்டார் ஸ்ரீ டாமன்சாராவைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட  சோதனைகளில் 32 மற்றும் 39 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சந்தேக நபர்களிடம் இருந்து இரண்டு கை தொலைபேசிகளையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். 32 வயதுடைய வேலை இல்லாத சந்தேக நபர் எட்டு முந்தையக் பதிவுகளையும் லோரி ஓட்டுநரான மற்றொரு சந்தேக நபர் 20 முந்தையக் குற்றப் பதிவுகளையும் கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் மேலும் சொன்னார்.


Pengarang :