ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

இதர முக்கியத் துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களின் தேவையை அரசாங்கம் ஆராயும்- சிவக்குமார்

பத்து காஜா, ஜன 21- அந்நியத் தொழிலாளர் பணியமர்த்தல் தளர்வு திட்டத்தின் மூன்று மாத கால அமலாக்கத்திற்குப் பிறகு அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நடைமுறையை முக்கியத் துறைகள் மற்றும் துணைத் துறைகளுக்கும் விரிவு படுத்துவதன் அவசியத்தை அரசாங்கம் ஆராயும்.

தற்போது உற்பத்தித் துறை, கட்டுமானம், விவசாயம், தோட்டம், சேவைத் துறை (உணவகங்கள் மட்டும்) ஆகிய ஐந்து முக்கியத் துறைகள் மற்றும் துணைத் துறைகள் இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளதாக மனிதவள அமைச்சர் வீ.சிவக்குமார் கூறினார்.

பெரிய எண்ணிக்கையிலான அந்நியத் தொழிலாளர்களின் சேவை அவசியம் தேவைப்படும் இந்த ஐந்து துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கான அனுமதியை வழங்குவது என மனிதவள அமைச்சும் உள்துறை அமைச்சும் முடிவெடுத்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஐந்து முக்கியத் துறைகளும் எதிர்நோக்கும் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சனைக்கு மூன்று மாத காலத்தில் தீர்வு காணப்பட்டப் பின்னர் சில்லறை வியாபாரம் உள்ளிட்ட இதரத் துறைகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிப்போம் என அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள பூசிங் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற மனிவள அமைச்சு நிலையிலான சீனப்புத்தாண்டு பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

அந்நியத் தொழிலாளர் பணியமர்த்தல் தளர்வு திட்டத்தின் வாயிலாக 500,000 அந்நியத் தொழிலாளர்கள் கட்டங் கட்டமாக நாட்டிற்கு தருவிக்கப்படுவார்கள் என்று சிவக்குமார் அண்மையில் கூறியிருந்தார்.


Pengarang :