ECONOMYMEDIA STATEMENT

சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிரான ‘ஓப் லீமாவ்’ நடவடிக்கையில் 120 பேர் கைது

கோலாலம்பூர், ஜன 21 - சீனப் புத்தாண்டை முன்னிட்டு  மேற்கொள்ளப்பட்ட 'ஓப் லீமாவ்' சோதனை நடவடிக்கையில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 120 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

115 ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்கிய சந்தேக நபர்கள் ஜனவரி 15 முதல் ஜனவரி 19 வரையிலான காலக்கட்டத்தில் கைது செய்யப்பட்டதாக அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நூர்சியா முகமது சாதுதீன் தெரிவித்தார்.

அக்காலக்கட்டத்தில் 20 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 92,481 வெள்ளி கைப்பற்றப்டடதாகவும் அவர் சொன்னார்.

1953ஆம் ஆண்டு பொது சூதாட்டச் சட்டத்தின்  பிரிவு 6(1) மற்றும் பிரிவு 7(2) இன் கீழ் இச்சம்பவங்கள் விசாரிக்கப்படுகின்றன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது அரச மலேசிய போலீஸ் படை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் நூர்சியா எச்சரித்தார்.

சட்டவிரோத சூதாட்டம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 016-5773477 என்ற வாட்ஸ்அப்  ஹாட்லைன் எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Pengarang :