ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று மதியம் தொடங்கி போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர், ஜன  24- சீனப் புத்தாண்டு  விடுமுறை  முடிவடைந்து மக்கள் வீடுகளுக்குத் திரும்புவதால் நாட்டின் சில முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று மதியம் தொடங்கி  வாகனப் போக்குவரத்து  அதிகரித்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் (பிளஸ்) கோப்பெங்கிலிருந்து தாப்பா வரையிலானப் பகுதி, சுங்காய் முதல் சிலிம் ரிவர்  வரை மற்றும் பெடாஸ் லிங்கி முதல் போர்ட்டிக்சன் வரை நெரிசல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக  மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (எல்.எல்.எம்.)  பேச்சாளர் கூறினார்.

கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் புக்கிட் திங்கியில் இருந்து கோம்பாக் டோல் சாவடி வரை போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், பொதுமக்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடவும், டோல் சாவடியில் பணம் செலுத்தும் போது நெரிசலைத் தவிர்ப்பதற்கு டச் என் கோ கார்டில் போதுமான இருப்பு இருப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்  என்று அவர் இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.

இதற்கிடையில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின்  263.4 கிலோ மீட்டரில் கோல கங்சார் முதல் ஈப்போ வடக்கு  வரையிலான தென் பகுதி  நோக்கிச் சொல்லும் தடத்தில் நான்கு கிலோமீட்டடருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக  எல்.எல்.எம். தெரிவித்தது.

 இந்த சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது நாடு முழுவதும் 3.8 மில்லியன் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி  அண்மையில் கூறியிருந்தார்.

Pengarang :