ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பாஸ்போர்ட் அலுவலகங்கள் வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படும்

கோலாலம்பூர்,  ஜன 26: குடிநுழைவு கவுன்டரில் நெரிசலை சமாளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நகர்ப்புற புதுப்பிப்பு சேவை மையங்கள் (UTC) தவிர 20 பாஸ்போர்ட் அலுவலகங்கள் இந்த வெள்ளிக்கிழமை முதல் வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படும்.

நெரிசலுக்கு ஒரு காரணமாக அமையும் பாஸ்போர்ட் அச்சிடும் இயந்திரங்களும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நாசுத்தியோன் இஸ்மாயில்  தெரிவித்தார்.

மேலும், கோலாலம்பூர் விமான நிலையத்தின் (KLIA) பாஸ்போர்ட் அலுவலகம் இனிமேல் பாஸ்போர்ட் தொடர்பான அவசர வழக்குகளுக்கும், பாஸ்போட் வழங்கும் அலுவலகமாகவும் செயல்படும் என்றார்.

“ஆரம்ப நடவடிக்கையாக இணையச் சந்திப்பு முறையும் மேம்படுத்த உள்ளது. அதாவது இணையம் மூலம் தேதி, நேரம் மற்றும் வரிசை எண் வழங்கப்படும்” என்று அவர் நேற்று இரவு தனது அதிகாரப்பூர்வ முகநூல் வழி தெரிவித்தார்.

டத்தோஶ்ரீ சைபுடின் நாசுத்தியோன் கருத்துப்படி, குடிநுழைவு கவுன்டரில் நெரிசலை சமாளிப்பதற்கான அனைத்து ஆரம்ப நடவடிக்கைகளும் நேற்று பிற்பகல் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

KLIA இல் வெளிநாட்டு பார்வையாளர்கள் சம்பந்தப்பட்ட நெரிசல் பிரச்சினை குறித்து டத்தோஶ்ரீ சைபுடின் நாசுத்தியோன் கூறுகையில், சோஷியல் விசிட் பாஸின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உண்மையான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்ய நிறுவப்பட்ட நடைமுறையின் அடிப்படையில் ஆய்வு செய்வதும் நெரிசலை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாகும் என்றார்.

இது சம்பந்தமாக, பிப்ரவரியில் இரண்டு ‘விரைவு பதில் குழுக்களை’ (QRT) உருவாக்குவதுடன், ஆபத்து குறைந்த 10 நாடுகளில் இருந்து வருகை புரியும் பயணிகளுக்குத் தானியங்கி வாயில்களை (ஆட்டோகேட்) பயன்படுத்துவதை விரிவுபடுத்துவது குறித்து அரசாங்கம் ஆய்வு செய்யும் என்று சைபுடின் கூறினார்.

“இந்தப் பணியில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மலேசியக் குடிநுழைவுத் துறை அதிகாரிகளின் பங்கை நான் பாராட்டுகிறேன், மேலும் இந்தப் பிரச்சனை தொடராமல் இருப்பதற்கான வழியைக் கண்டறிய சமூகத்தின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை நான் வரவேற்கிறேன்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :