ECONOMYMEDIA STATEMENT

நோயாளியை கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து 5 பாரம்பரிய மருத்துவர்கள் தப்பினர்

ஷா ஆலம், ஜன 27- ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆடவர் ஒருவரை கொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து இரு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பாரம்பரிய மருத்துவர்களை இங்குள்ள உயர் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.

அந்த ஐவருக்கும் எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் இருப்பதை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியதைத் தொடர்ந்து நீதித்துறை ஆணையர் நுருள்ஹூடா நுர் அய்னி முகமது நோர் இந்த தீர்ப்பை வழங்கியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

முகமது ஜம்ரி அப்துல் ரஹிம் (வயது 41), முகமது நஸ்ரி அபு ஹசான் (வயது 39), லிசாவாத்தி ஜூல்கிப்ளி (வயது 41), ஹிடாயுவாஹிடா மோஹாய் (வயது 39) மற்றும் அம்ஸார் முகமது நஷான் (வயது 40) ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட அந்த ஐந்து பாரம்பரிய மருத்துவர்களாவர்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி விடியற்காலை 4.00 மணிக்கும் காலை 8.00 மணிக்கும் இடையே பூச்சோங், தாமான் பூச்சோங் இந்தானில் உள்ள ஒரு வீட்டில் நோயாளியான முகமது அஃப்ரில் ஷியா வாடூட் (வயது 35) என்பவரை படுகொலை செய்ததாக அவர்கள் மீது கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய  மரண தண்டனை வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட அதே சட்டத்தின் 34வது பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட நோயாளிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 முதல் 26 வரை அந்த ஐவரும் சிகிச்சை வழங்கியதாகவும் இந்த சிகிச்சையின் போது அந்நபரின் வயிற்றில் வீக்கம் வரும் வரை மிதித்ததாகவும் அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

எனினும், தொடுதல் முறையின் வாயிலாக மட்டுமே சம்பந்தப்பட்ட நோயாளிக்கு தாங்கள் சிகிச்சை வழங்கியதாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர்.


Pengarang :