ECONOMYMEDIA STATEMENT

பந்திங்கில் சரவணக் குமார் படுகொலை- இரு பாதுகாவலர்கள் மீது குற்றச்சாட்டு

கோல லங்காட், ஜன 27- இரு வாரங்களுக்கு முன்னர் ஆடவர் ஒருவரை படுகொலை செய்ததாக இரு பாதுகாவலர்கள் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இம்மாதம் 11ஆம் தேதி இரவு மணி 10.00 மற்றும் 11.00 மணிக்கு இடையே கம்போங் ஓலாக் லெம்பிட், ஜாலான் ஹாஜி வஹாப்பில் எம். சரவணக் குமார் (வயது 24) என்பவரைப் படுகொலை செய்ததாக .இஷார்டி சம்சுடின் (வயது 41) மற்றும் யாஷிட் முகமது யூசுப் (வயது 31) ஆகிய இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பில் எர்மாடியானி இஸ்மாடி வழக்கை நடத்தும் வேளையில் இஷார்டியைப் பிரதிநிதித்து வழக்கறிஞர் நிக் முஹாம்மர் ஹாரி முகமது சுக்ரியும் முகமது யாஷிட் சார்பில் வழக்கறிஞர் ஆர்.ஸ்ரீதரனும் ஆஜராகின்றனர்.

இந்த வழக்கின் மறு விசாரணையை மாஜிஸ்திரேட் கைருள் ஃபாரி யூசுப் வரும் பிப்வரி 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மளிகைக் கடை ஒன்றின் அருகே நிகழ்ந்த கைகலப்பில் ஆடவர் ஒருவரை இரு பாதுகாவலர்கள் அடித்துக் கொன்றதாக இம்மாதம் 19ஆம் தேதி பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்த து.


Pengarang :