ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் தொழு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு- அமைச்சர் கவலை

புத்ராஜெயா, ஜன 31- நாட்டில்  தொழு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கவலை தெரிவித்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் 142 ஆக  இருந்த இந்த நோயாளிகளின் எண்ணிக்கை கடந்தாண்டில் 15.5 விழுக்காடு அதிகரித்து 164 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் சொன்னார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் மொத்தம் 181 பேர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதாக நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் கூறினார். “விரைந்து செயல்படுவோம், தொழு நோயை ஒழிப்போம்“ எனும் கருப்பொருளில் நேற்று அனுசரிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான அனைத்துலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு அமைச்சர் அந்த அறிக்கையை  வெளியிட்டிருந்தார்.

எண்டமிக் பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர சோதனை நடவடிக்கையின் பலனாக இந்த நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு அடையாளம் காணப் பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நோய்க்கான ஆபத்து உள்ளவர்களை வட்டார மற்றும் மாவட்ட நிலையில் அடையாளம் கண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இப் பிச்னைக்குத் தீர்வு காண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் சொன்னார்.

மக்கள் மத்தியில் சரும சோதனையை தீவிரமாக மேற்கொள்வது, அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை அடையாளம் காண்பது, வழிகாட்டிகளுக்கேற்ப சுகாதார கிளினிக்குகளில் மருத்துவ பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

தொழு நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள், எண்டமிக் வட்டாரத்தில் வசிப்பவர்கள் தங்கள் உடலில் அரிப்பு இல்லாத  வெண்மை நிற அல்லது பொன்னிறப் புள்ளிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பெர்னாமா


Pengarang :