MEDIA STATEMENTPBT

சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்களில் எம்.பி.கே.ஜே. அதிரடிச் சோதனை- 9 லோரிகள் பறிமுதல்

ஷா ஆலம், ஜன 31- சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டும் இடங்கள் மீது காஜாங் நகராண்மை கழகம் இம்மாதம் 26 ஆம் தேதி வரை மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில் ஒன்பது லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அவற்றுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது தொடர்பில் 2007ஆம் ஆண்டு காஜாங் நகராண்மை கழக குப்பை சேகரிப்பு மற்றும் அழிப்பு துணைச் சட்டத்தின் கீழ் அந்த லோரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நகராண்மைக் கழகத் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.

பொறுப்பற்ற தரப்பினர் அனுமதிக்கப்படாத பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கும் நோக்கிலான இந்த நடவடிக்கையை நகராண்மைக் கழகத்தின் நகர  மற்றும் சுகாதாரச் சேவைத் துறை மேற்கொண்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மாதம் மட்டும் ஒன்பது லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. காஜாங் நகராண்மைக் கழகத்தின் எல்லைக்குட்பட்ட ஜாலான் குவாரி சுங்கை லோங் மற்றும் இதரப் பகுதிகளில் இந்த லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற சுற்றுச்சூழல்  பாதுகாப்புச் சோதனை நடவடிக்கைகளின் போது 27 லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டு 29 குற்றப்பதிவுகள் வழங்கப் பட்டன என்று அவர் சொன்னார்.


Pengarang :