ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாயை கட்டையால் தாக்கி காயப்படுத்தியதாக லாரி ஓட்டுநர் மீது  குற்றச்சாட்டு

கோல சிலாங்கூர், ஜன 31- நாயை மரக்கட்டையைக் கொண்டுத் தாக்கி காயப்படுத்தியதாக லாரி ஓட்டுநர் ஒருவர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.  தமக்கெதிராக சுமத்தப்பட்ட இக் குற்றச்சாட்டை முகமது ஜைனால் மாட் டஹாம் (வயது 41) என்ற அந்த நபர் மறுத்து விசாரணை கோரினார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் பண்டார் புஞ்சா ஆலமில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றின்  பாதுகாவலர் சாவடியில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் மீது 2015ஆம் ஆண்டு பிராணிகள் நலச் சட்டத்தின் 29(1)(ஏ) பிரிவின் கீழும் அதே சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வகை செய்யும் பிரிவு 29(1) கீழும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சட்டப் பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப் பட்டால் 20,000 வெள்ளி முதல் 100,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது மூன்றாண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

முன்னதாக குற்றஞ்சாட்டப் பட்டவருக்கு ஒரு நபர் உத்தரவாதத்துடன்  10,000 வெள்ளி ஜாமீன் வழங்க பரிந்துரைத்த சிலாங்கூர் கால்நடைத் துறையின் வழக்கறிஞர் முகமது ஷாரிப் சப்ரான், கூடுதல் நிபந்தனையாக அவரின் அனைத்துலக கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றார்

வழக்கறிஞர் நியமிக்கப்படாத நிலையில் தாமே இந்த வழக்கில் ஆஜரான முகமது ஜைனால் குடும்ப பொறுப்பை சுமக்கும் நிலையில் தாம் உள்ளதால் ஜாமீன் தொகையை குறைக்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 6,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் பிப்ரவரி 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 

 


Pengarang :