ECONOMYMEDIA STATEMENT

ஜனவரி முதல் தேதி வரை 33,000 பேர் சிலாங்கூர் கூ வீடுகளுக்கான சாவிகளை பெற்றனர்

ஷா ஆலம், பிப் 1- இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி வரை 93 சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டங்களில் வீடுகளை வாங்கிய 33,071 பேர் சாவிகளை பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மேலும் 16,65 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேளையில் எஞ்சிய வீடுகளைக் கட்டுவதற்கான விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக அவர் சொன்னார்.

இந்த வீடமைப்புத் திட்டங்களின் மேம்பாடுகளை சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்ச்சியாக கண்காணித்து வரும். இந்த வீடுகள் தரமான முறையில் கட்டப்பட்டுள்ளது மாநில மக்களுக்காக நியாயமான விலையிலும் விற்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

மாநில மக்கள் சொந்த வீடுகளைப் பெறுவதை எளிதாக்குவதற்காக சிலாங்கூர் வீடு நிர்மாணிப்பு உதவித் திட்டத்தின் வாயிலாகவும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று அவர் தனது  பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூர் மக்கள் வசதியான, தரமான, கட்டுபடி விலையிலான வீடுகளைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டங்கள் யாவும் அமல் படுத்தப் படுகின்றன என்றார் அவர்.

இதனிடையே, இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி வரை ரூமா இடாமான் மற்றும் ரூமா ஹராப்பான் திட்டங்களை உள்ளடக்கிய 386 சிலாங்கூர் கூ திட்டங்கள் வாயிலாக 221,671 வீடுகளுக்கு அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளதாக  அமிருடின் தனது பேஸ்புக் பதிவில்  பகிர்ந்து கொண்ட விளக்கப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில மக்கள் நியாயமான விலையில் சொந்த வீட்டினைப் பெறுவதை உறுதி செய்வதற்காக பத்தாண்டுகளுக்கு முன்னர் மாநில அரசு இந்த சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

 


Pengarang :