ECONOMYMEDIA STATEMENT

முகாமிடும் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டி, லைசென்ஸ் முறையை அமல்படுத்திய முதல் மாநிலம் சிலாங்கூர்

சுபாங் ஜெயா, பிப் 1- ஊராட்சி மன்றங்களின் வர்த்தக மற்றும் தொழில்துறை துணைச் சட்டத்தின் கீழ பொழுது போக்கு முகாமிடும் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டி மற்றும் லைசென்ஸ் முறையை அமல்படுத்திய முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. 

இந்த பரிந்துரை விரைவில் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டப் பின்னர் பொழுதுபோக்கு முகாமிடும் நடவடிக்கைகளை பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

முகாமிடும் இடங்கள் தொடர்பான வழிகாட்டியைத் தயாரிப்பதற்காக நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில் நடைபெற்ற விவாதத்தின் முடிவுகள் இன்னும் இரு மாதங்களில் மாநில ஆட்சிக்குழுவிடம் சமர்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இப்பரிந்துரைகள் கொள்கைகளாக வகுக்கப்பட்டப் பின்னர் அதனை முகாம் நடத்துநர்கள் அனைவரும் அவசியம் பின்பற்ற வேண்டும். பதிவு செய்யப்படாத முகாம் நடத்துநர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என்று அவர் நினைவுறுத்தினார்.

சிலாங்கூரிலுள்ள அனைத்து பொழுது போக்கு முகாம் நடத்துநர்களும் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கி ஊராட்சி மன்றங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :