ACTIVITIES AND ADSECONOMY

மாநில அரசின் மலிவு விற்பனைக்கு தாமான் மேடான் தொகுதியில் அமோக வரவேற்பு

பெட்டாலிங் ஜெயா, பிப் 1- இங்குள்ள டத்தாரான் டேசா செபாக்காட்டில் இன்று நடைபெற்ற மாநில அரசின் அத்தியாவசிய பொருள் மலிவு விற்பனைக்கு பொது மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்தது.

கூட்டரசு தினத்தை முன்னிட்டு இன்று கோலாலம்பூருக்கு பொது  விடுமுறை என்பதால் அதிகமானோர் இந்த மலிவு விற்பனையில் கலந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.

தாமான் மேடான் சட்டமன்றத்  தொகுதி நிலையில் நடைபெற்ற இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையில் 300 மூட்டை அரிசியும் 300 தட்டு முட்டையும் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன.

இந்த மலிவு விற்பனையில் கலந்து கொள்வதற்காக பொதுமக்கள் காலை 7.30 மணி முதல் வரிசையில் காத்திருந்ததாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தின் உள் தணிக்கை உயர்நெறி மற்றும் இடர் மேலாண்மை பிரிவு நிர்வாகி ஃபாராடினா ஹைருடின் கூறினார்.

இந்த விற்பனை வழக்கமாக காலை 10.00 மணிக்கு தான் ஆரம்பிக்கப்படும். எனினும் நீண்ட வரிசையில் பலர் காத்திருந்த காரணத்தால் காலை 9.30 மணிக்கெல்லாம் விற்பனையைத் தொடக்கி விட்டோம் என்று அவர் சொன்னார்.

அதிகமானோருக்கு பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் தாமதமாக வருவோர் ஏமாற்றம் அடையாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் ஒருவருக்கு ஒரு கோழி மற்றும் ஒரு தட்டு முட்டை என விற்பனையை கட்டுப்படுத்தி விட்டோம் என அவர் குறிப்பிட்டார்.

வழக்கமாக, தாமதமாக வருபவர் எந்த பொருளையும் வாங்க முடியாத நிலையில் வெறுங்கையோடு செல்வர். இந்த அணுகுமுறையின் வாயிலாக அனைவருக்கும் பொருட்கள் கிடைப்பதற்குரிய வாய்ப்பு கிட்டியது என்றார் அவர்.

 

 

 

 

 


Pengarang :