NATIONAL

கடந்தாண்டில் 444,000 புகார்களைக் கோலாலம்பூர் போலீசார் பெற்றனர்

கோலாலம்பூர், பிப் 2- கோலாலம்பூர் மாநகரப் போலீசார் கடந்தாண்டு 444,120 புகார்களைப் பெற்றனர். அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 374,588 ஆக இருந்தது.

அந்த புகார்களில் 40 விழுக்காடு இதரத் துறையினரின் விசாரணைக்கு உட்பட்டவையாகும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மி அபு பாக்கார் கூறினார்.

கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தினசரி சராசரி 50 புகார்கள் பெறப்பட்டன. குற்றம் புரிந்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அனைத்து புகார்கள் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.

இந்த புகார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஒரு நல்ல அறிகுறியாகத் தென்படுகிறது. காரணம், போலீஸ் துறை மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதை இது புலப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.

இன்று இங்குள்ள கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற மாதாந்திரச் சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

குற்றபுலனாய்வுத் துறை, வர்த்தகக் குற்ற விசாரணைத் துறை, போதைப்பொருள் விசாரணைத் துறை, சாலை போக்குவரத்து மற்றும் அமலாக்கத் துறை  ஆகியவை பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 86,409 விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளன என்றார் அவர்.


Pengarang :