SELANGOR

‘ரும்புன் சிலாங்கூர்‘ விற்பனையில் மலிவான விலையில் பொருட்கள் வாங்க பொதுமக்களுக்கு வாய்ப்பு

காஜாங், ஏப் 26- உலு லங்காட் மாவட்டத்திற்கான ரும்புன் சிலாங்கூர் பயணத் தொடரை முன்னிட்டு டுசுன் துவாவிலுள்ள தேசிய இளைஞர் உயர் தொழில் திறன் கழகத்தில் மலிவு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோஹிஜ்ரா எனப்படும் வர்கா ஹிஜ்ரா சிலாங்கூர் கூட்டுறவுக் கழகத்தின் ஏற்பாட்டிலான் இந்த ரும்புன் சிலாங்கூர் விற்பனை இன்றும் நாளையும் காலை 10.00 மணி தொடங்கி நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும் என்று ஒற்றுமைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்  டத்தோ ரிஸாம் இஸ்மாயில் கூறினார்.

இந்த பயணத் தொடரை முன்னிட்டு பொது மக்கள் சந்தையை விட குறைவான விலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக ஜூவாலான் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம் என்று அவர் சொன்னார்.

உலு லங்காட் நிகழ்வுக்குப் பிறகு இந்த பயணத் தொடர் நடைபெறும் ஏழு இடங்களில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த  மலிவு விற்பனை நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களில் ஒன்றாக இந்த மலிவு விற்பனை அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் இறைச்சி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ ‘சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :