ECONOMYMEDIA STATEMENTNATIONAL

“மெனு ரஹ்மா“ திட்டத்தை நாடு முழுமைக்கும் விரிவுபடுத்த மைடின் நிறுவனம் திட்டம்

கோலாலம்பூர், பிப் 3- “மெனு ரஹ்மா“ திட்டத்தை நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளுக்கு விரிவுபடுத்த  மைடின் முகமது ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (மைடின்) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவை விட சபா மற்றும் சரவாக்கில் பொருள் விலை மிகவும் அதிகம் என்ற போதிலும் 5.00 வெள்ளிக்கும் குறைவான விலையில் உணவு வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த தாங்கள் உறுதி பூண்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ அமீர் அலி மைடின் கூறினார்.

சபா மற்றும் சரவாவில் உணவு மூலப் பொருட்களின் விலை அதிகம். தீபகற்ப மலேசியாவில் உள்ள மைடின் கிளைகளில் 9.40 வெள்ளி விலையில் விற்கப்படும் கோழி சண்டகான் மைடின் கிளையில் 12.00 வெள்ளியாக உள்ளது என்று அவர் சொன்னார்.

இன்று அல்லது நாளை சண்டகான் மற்றும் கூச்சிங்கில் உள்ள இரு மைடின் கிளைகளில் மெனு ரஹ்மா திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். இந்த திட்டத்தின் கீழ் 4.90 வெள்ளி விலையில் விற்கப்படும் உணவை வாங்கும் வாய்ப்பினை சபா மற்றும் சரவாக் மக்கள் இழக்கக்  கூடாது என்ற நோக்கத்தில் இந்த ஏற்பாட்டைச் செய்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் உள்ள 15,000 உணவகங்களில் 5.00 வெள்ளி விலையில் மதிய மற்றும் இரவு உணவை வழங்க வகை செய்யும் மெனு ரஹ்மா திட்டத்தை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கை ச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப் கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.

இதனிடையே, இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக 10 வித உணவுகள் அடங்கிய காலைச் சிற்றுண்டியை 2.50 விலையில் விற்க தாங்கள் முன் வந்துள்ளதாகவும் டத்தோ அமீர் குறிப்பிட்டார்.


Pengarang :