ECONOMYMEDIA STATEMENTNATIONAL

2030ஆம் ஆண்டுக்குள் ஹைட்ரோஜன் பஸ்களை பயன்படுத்த சிலாங்கூர் திட்டம்

அம்பாங் ஜெயா, பிப் 4- அடுத்த ஐந்தாண்டுகளில் அல்லது 2030ஆம் ஆண்டுக்குள் ஹைட்ரோஜன் பஸ்களை பயன்படுத்துவது  குறித்து சிலாங்கூர் அரசு ஆராய்ந்து வருகிறது.

இந்த ஹைட்ரோஜன் பஸ்கள் சுற்றுச்சூழலுக்கு நட்புறவானது என்பதோடு பெட்ரோல் வாகனங்களைப் போல் புகையும் வெளியிடாது. மேலும் மின்சார பஸ்களை விட அதிக சக்தியும் கொண்டது என்று சுற்றுச்சூழல் துறைக்கான  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

கார்பன் வெளியேற்றத்தை வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 45 விழுக்காடாகவும் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் சுழியம் விழுக்காடாகவும்  குறைக்கும் மாநில அரசின் திட்டத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று ஹீ லோய் சியான தெரிவித்தார்.

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக நிலையிலான சுற்றுச்சூழல் தினத்தை இங்குள்ள மெனாரா எம்.பி.ஏ.ஜே.வில் நேற்றிரவு தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

எனினும், அதிக அளவில் ஹைட்ரோஜனை பெறுவது மற்றும் வெளிநாடுகளிலிருந்து அதனை இறக்குமதி செய்வது போன்றவை இத்திட்ட அமலாக்கத்தில் மாநில அரசு எதிர்கொள்ளும் சிக்கல்களாக உள்ளதாக அவர் சொன்னார்.

ஹைட்ரோஜன் பஸ்களை பயன்படுத்துவதற்கு முன்னர் ஹைட்ரோஜன் தயாரிப்பை உறுதி செய்ய வேண்டும். வாகனங்களுக்கு பயன்படுத்தும் அளவுக்கு அதிக அளவில் ஹைட்ரோஜனைத் தயாரிக்கும் ஆற்றலை இன்னும் நாம் எட்டவில்லை என்றார் அவர்.

மற்ற நாடுகள் ஹைட்ரோஜன் தயாரிப்பில் ஈடுபட தொடங்கி விட்டன. சரவாக் மாநிலம் கூட இந்த விஷயத்தில் முன்னிலையில் உள்ளதோடு சிங்கப்பூருக்கும் அந்த எரிபொருளை அது ஏற்றுமதி செய்யவுள்ளது.

ஹைட்ரோஜன் பஸ் களுக்குத் தேவையான ஹைட்ரோஜனை தயாரிப்பதில் கொரியா போன்ற நாடுகளின் ஒத்துழைப்பை நாட நாம் முடிவு செய்துள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

போக்குவரத்து துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மாநிலத்தில் ஹைட்ரோஜன் பஸ்களை பயன்படுத்துவது மத்திய அரசின் முடிவைப் பொறுத்ததாகும் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :