ECONOMY

இலவச குடிநீர் திட்டத்திற்கு சிலாங்கூர் மக்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், பிப்.6-  மாநிலத்தில் வசிப்பவர்கள் டாருல் ஏசான் நீர் திட்டத்தின்  மூலம் மாதத்திற்கு 20 கன மீட்டர் இலவச குடிநீரைப் பெறுவதற்கு  இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

இதனை அறிவித்த ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் www.airselangor.com/residential/skim-air-darul-ehsan  எனும் அகப்பக்கம் மூலம் இந்த பதிவை மேற்கொள்வதற்கான செயல்முறை காணொளியை  தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளது .

இந்த இலவச குடிநீர் திட்டத்தின் மூலம் மேலும் 100,000 ஆயர் சிலாங்கூர் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்றும் இத்திட்டத்திற்கு உண்டாகும்  3 கோடி வெள்ளிக்கும் மேலான செலவை சிலாங்கூர் அரசாங்கம் முழுமையாக ஏற்கும் என்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் அறிவித்திருந்தார்.

கடந்தாண்டு அக்டோபர் மாத நிலவரப்படி  300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வரும் வேளையில் வரும் 2024 டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்தத் திட்டத்திற்கான பதிவு நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த இலவச குடிநீர் திட்டத்தில் பங்கேற்பதற்கான வருமான வரம்பு 4,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தப்படுவதாக வும் அமிருடின் குறிப்பிட்டார்.

தகுதித் தேவைகளில் விண்ணப்பதாரர்கள் மலேசிய குடிமக்களாகவும் , தனிப்பட்ட மீட்டர் வகை குடியிருப்பு வளாகங்களில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், ஒருவர்  ஒரு மீட்டர் கணக்கிற்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.


Pengarang :