ECONOMYMEDIA STATEMENT

மாநில நிலையிலான பொங்கல் விழா நாளை ஸ்ரீமூடா, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறுகிறது

ஷா ஆலம், பிப் 10- மாநில அரசு நிலையிலான பொங்கல் விழா நாளை 11ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.00 மணி தொடங்கி இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா ஸ்ரீ சுவர்ண மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சமூக நலத்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் ஆகியோர் சிறப்பு வருகை புரிய உள்ளனர்.

இந்த நிகழ்வில் மந்திரி புசார் சிறப்புரையாற்றுவதோடு மாநிலத்திலுள்ள ஆலய பொறுப்பாளர்களிடம் வருடாந்திர மானியத்திற்கான காசோலைகளையும் ஒப்படைப்பார்.

இந்த பொங்கல் விழாவின் சிறப்பு அங்கமாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பைச் சேர்ந்த 100 பேருக்கு வேட்டி,சேலைகள் வழங்கப்படும். மேலும், ஷா ஆலம் தமிழர் சங்கத்தின் ஏற்பாட்டில் கணபதிராவ் அவர்களை கௌரவிக்கும் அங்கமும் இடம் பெறும்.

இந்த பொங்கல் விழாவில் தலைவர்களின் உரையோடு சிலம்பம் மற்றும் கலை, கலாசார அங்கங்களுடன் கூடிய கலை நிகழ்ச்சியும் இடம் பெறும். மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் 20 அதிர்ஷ்டசாலிகள் அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்வதற்குரிய வாய்ப்பும் உள்ளது.

மாநில அரசின் ஏற்பாட்டிலான பிரதான பொங்கல் விழா நிகழ்வாக இது அமைகிறது. ஏற்கனவே, ரவாங் மற்றும் செமினி, பண்டார் ரிஞ்சிங்கில் இரு பொங்கல் நிகழ்வுகள் மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பொங்கல் விழாவையொட்டி பல்வேறு சமய, மற்றும் பாரம்பரிய போட்டி நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை காலை 8.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை ஆலய வளாகத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறும்.

இங்கு நடைபெறும் கோலப் போட்டி, உறியடித்தல், சமய கேள்வி-பதில் போட்டி, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இந்த நிகழ்வுகளில் சுற்றுவட்டார பொது மக்கள் திரளாக கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.


Pengarang :