ECONOMYMEDIA STATEMENT

“கூட்டு“ அடிப்படையிலான சேமிப்புத் திட்டத்தில் மோசடி- எண்மர் கைது

கோலாலம்பூர், பிப் 12- “கூட்டு கட்டும்“ பாணியிலான முதலீட்டுத்  திட்ட மோசடி தொடர்பில் எண்மரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 27ஆம் தேதி நான்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைளில் அவர்கள் பிடிபட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது 31 முதல் 37 வயது வரையிலான ஆறு பெண்களும் இரு ஆண்களும் தடுத்து வைக்கப்பட்டதாக அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நோர்ஷியா சாடுடின் கூறினார்.

அக்கும்பலிடமிருந்து ஆடம்பரக் கார், சில ஏ.டி.எம்.கார்டுகள், விலையுயர்ந்த கைபேசிகள், மோசடி நடவடிக்கையுடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மொத்தம் 44 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியை உள்ளடக்கிய இந்த மோசடி தொடர்பில் நாடு முழுவதும் 116 புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இக்கும்பல் கூட்டு அடிப்படையிலான சேமிப்புத் திட்டத்தில் வாடிக்கையாளர்களை சேர்த்து வந்தது என்று அவர் சொன்னார்.

அக்கும்பல் குறைந்த பட்சம் 250 வெள்ளி முதல் அதிகப்பட்சம் 20,000 வெள்ளி வரையிலான சேமிப்புத் தொகையை உட்படுத்திய இரண்டு முதல் ஐந்து மாத காலக்கட்டத்திற்கான சேமிப்பு உள்ளிட்ட பல புதிய திட்டங்களை கடந்த 2021ஆம் ஆண்டில் அக்கும்பல்  அறிமுகப்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார்.

சேமிப்புத் தொகையிலிருந்து 15 முதல் 40 விழுக்காடு வரையிலான லாபத்தை பெற முடியும் என்றும் அக்கும்பல் கூறியுள்ளது. எனினும், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தங்களின் சேமிப்புத் தொகையை பெற முடியாமல் போனதைத் தொடர்ந்து அதில் முதலீடு செய்தவர்கள் போலீசில் புகார் செய்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :