NATIONAL

29 மியன்மார் நாட்டினரைக் கடத்தி வந்ததாகப் போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

கோத்தா பாரு, பிப் 13- இவ்வாண்டு ஜனவரி மாதம் 29 மியன்மார் பிரஜைகளை நாட்டிற்குள் கடத்தி வந்ததாகப் போலீஸ்காரர் ஒருவர் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கடந்த மாதம் 16ஆம் தேதி இரு வேறு இடங்களில் 19 முதல் 47 வயது வரையிலான அந்த மியன்மார் பிரஜைகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் கொண்டு வந்ததாகக் கார்ப்ரல் சைட் ஷாயிபுல் அம்ரி சைட் சோலஹூடின் (வயது 38) என்ற அந்த போலீஸ்காரர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் நீதிபதி முகமது ஜூல் ஜகிப்டின் ஜூல்கிப்ளி முன்னலையில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

ஆறு பெண்கள் மற்றும் ஏழு ஆண்கள் அடங்கிய மியன்மார் பிரஜைகளை துஞ்சோங், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கிளந்தான் மாநிலத் தலைமையகம் முன் டய்ஹாட்ஸூ வேனி கடத்தியதாக அவருக்கு எதிராக முதலாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

அதே தினம் பின்னிரவு 1.30 மணியளவில் ஜாலான் பிந்து கேங் உலுவிலுள்ள ஹோம் ஸ்தே எனப்படும் தங்கும் மையத்தில் ஆறு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை தங்க வைத்திருந்ததாக அவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.


Pengarang :