ECONOMYMEDIA STATEMENT

வீடு வாங்குவோருக்கான முன்பண உதவித் திட்டம் நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் தொடங்கப்படும்

ஷா ஆலம், பிப் 18- வீடு வாங்குவோருக்கு உதவும் நோக்கிலான சிலாங்கூர் வீட்டுக் முன் கட்டண உதவித் திட்டம் நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் தொடங்கப்படும்.

வீடு வாங்குவோர் முன்பணத்தைத் தயார் செய்வதில் உதவும் நோக்கிலான இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பு கடந்தாண்டு இறுதியில் தாக்கல் செய்யப்பட்ட 2023ஆம்  ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளியிப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முன்பணத்தைச் செலுத்துவதற்கான வசதி இல்லாத காரணத்தால் சிலாங்கூர் கூ வீடுகளை வாங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினர் அந்த வாய்ப்புகளை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை தங்களிடம் உள்ள தரவுகள் காட்டுவதாக அவர் சொன்னார்.

இவ்விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்திடமிருந்து  இறுதி  செயலறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தொடர்ச்சியான வளர்ச்சியையும் மாநிலத்தின் வளங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்ளப்படுவதையும் காண நாங்கள் விரும்புகிறோம் என அவர் சொன்னார்.

நேற்று இங்கு க்வாசா டாமன்சாரா சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டத்தை தொடக்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொது மக்களுக்கு குறிப்பாக முதல் வீட்டை வாங்குவோருக்கு உதவும் நோக்கில் 10 கோடி வெள்ளி நிதியில் இந்த முன்கட்டண நிதித் திட்டம் தொடங்கப்படுவதாக அமிருடின் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.

வீடு வாங்குவோர் எதிர்நோக்கும் முன்பணம் செலுத்துவது, சீரற்ற கடன்களால் ஏற்பட்ட பிரச்சனை, வீட்டு அடிப்படைத் தளவாங்கள் வாங்கும் செலவினம், வழக்கறிஞர் கட்டணம், வீட்டு வாடகைப் பிரச்சனை போன்றவற்றுக்கு இந்த திட்டம் தீர்வு காண உதவும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :