ECONOMYMEDIA STATEMENT

வெ.15 கட்டணத்தில் இயங்கலை வாயிலாக மருத்துவ ஆலோசகச் சேவை- புக்கிட் காசிங் தொகுதி வழங்குகிறது

ஷா ஆலம், பிப் 18- இயங்கலை வாயிலாக மருத்துவ ஆலோசகச் சேவையை புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி பொது மக்களுக்கு வழங்குகிறது. “டாக்டர் எனிவேர்“ எனும் செயலி வாயிலாக வழங்கப்படும் இச்சேவைக்கு கட்டணமாக 15.00 வெள்ளி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

நோயாளிகள் குறைவான விலையில் மருத்துவ ஆலோசக சேவையைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த இயங்கலை மருத்துவ ஆலோசக சேவை வழங்கப்படுவதாக தொகுதி உறுப்பினர் ஆர். ராஜீவ் கூறினார்.

இந்த சேவை புக்கிட் காசிங் தொகுதி மக்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் 15.00 வெள்ளி கட்டணத்தில் சில நிமிட நேரங்களுக்கு இயங்கலை வாயிலாக மருத்துவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறலாம் என அவர் தெரிவித்தார்.

கிளினிக்குகளில் இத்தகைய ஆலோசக சேவையைப் பெறுவதற்கு 60.00 வெள்ளி வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் நோயாளிகளின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த திட்டத்தை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

இதுதவிர, கிளினிக்கிற்கு சென்று வருவதற்கான செலவு, அங்கு காத்திருக்கும் நேரம் உள்ளிட்ட அசௌர்கர்யங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.

மருத்துவரின் ஆலோசனையைப்  பெற்றப் பின்னர் நோய்க்கு தேவையான மருந்துகளை அதே செயலி வாயிலாக அல்லது  தாங்கள் தேர்ந்தெடுக்கும் மருந்தகங்களிடமிருந்து அவர்கள் வாங்கலாம். அந்த மருந்துகள் ஒரு மணி நேரத்தில் வீடு தேடி வரும் என்றார் அவர்.


Pengarang :