ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அரசியல் நையாண்டிகளை தடுக்க நாடாளுமன்றச் சேவைகள் சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும்- அமிருடின் 

ஷா ஆலம், பிப் 20- அரசியல் நையாண்டி அல்லது சச்சரவு நிகழும் இடமாக நாடாளுமன்றம் மாறுவதை தடுத்து மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு ஏதுவாக நாடாளுமன்ற அமைப்பு நெறிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலாண்மை வழிகாட்டியாக கொள்வதற்கு ஏதுவாக 1992ஆம் ஆண்டில் அகற்றப்பட்ட நாடாளுமன்ற சேவைகள் சட்டத்தை மறுபடியும் அமல்படுத்துவதன் மூலம் இந்த முயற்சியை  நடைமுறைப் படுத்த முடியும் என்று கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நிர்வாகத்தை நடத்துவதற்குரிய வழிகாட்டியாக விளங்கக் கூடிய நாடாளுமன்றச் சேவைகள் சட்டத்தை நாம் முன்பு கொண்டிருந்தோம். அந்த சட்டம் அகற்றப்பட்டப் பின்னர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இடமாக நாடாளுமன்றம் மாறி விட்டது என்று அவர் அவர் சொன்னார். 

மக்களவையில் இன்று அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தங்களின் மதிப்பையும் கௌரவத்தையும் உயர்த்துவதற்கும் சபாநாயகரின் அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கும் ஏதுவாக அந்த சட்டத்தை மறுபடியும் கொண்டு வருவது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் சொன்னார்.

இதனை நாம் செய்தால் நாடாளுமன்றத்தை வெறும் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கும் இடமாக அல்லாமல் கொள்கைகளை வகுக்கும் உன்னத இடமாக மாற்ற இயலும் என்றார் அவர்.

நாடாளுமன்றம் சுயேச்சை அமைப்பாகவும் சொந்த விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளக்கூடிய, ஊழியர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ள மற்றும் நிதி நிர்வாகத்தை சுயமாக கையாளும் அமைப்பாகவும் விளங்க வகை செய்யும் அந்த சட்டம் 1963ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது.


Pengarang :