NATIONAL

150 கிலோ கிராம் போதை பொருளுடன் மூன்று சகோதரர்கள் கைது

கோலாக் கிராய், பிப் 21: நேற்று RM5.4 மில்லியன் மதிப்புள்ள 150 கிலோகிராம் சியாபுக்களுடன் விணியோகஸ்தர் களாகவும், தொண்தோவாகவும் செயல்பட்ட மூன்று சகோதரர்களைக், கம்போங் கெனோர் மற்றும் கம்போங் தெங்கா ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் காவல்துறையினர் கைது செய்தனர்.

24 முதல் 45 வயதுக்குட்பட்ட அம்மூன்று சகோதரர்களும் காலை 7.50 மணி அளவில் மிட்சுபிஷி லாரி மற்றும் ஹோண்டா சிட்டி காரில் பயணித்த போது கைது செய்யப் பட்டதாகக் கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் சாக்கி ஹருன் தெரிவித்தார்.

“கம்போங் தெங்கா சாலையோரத்தில் மிட்சுபிஷி லாரியைக் காவல்துறையினர் நிறுத்தினர். சோதனையின் போது லாரியின் கீழ் கெத்தும் நீர் என சந்தேகிக்கப்படும் திரவம் கொண்ட பிளாஸ்டிக் பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது“, என்றார்.

“மேலும் லாரியின் பின்புற அறையைச் சோதனை செய்தபோது, ஒரு வெள்ளை கொள்கலன் இருந்த பழுப்பு நிற பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கெத்தும் நீர் என்று சந்தேகிக்கப்படும் திரவம் ஏழு பிளாஸ்டிக்கில் இருந்தன.

“சியாபு என்று சந்தேகிக்கப்படும் படிகத்தின் சுருக்கப்பட்ட கட்டிகளைக் கொண்ட 25 பிளாஸ்டிக் பொட்டலங்களை ஆறு சாக்குகளில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்,” என்று அவர் கூறினார்.

இன்று கோலாக்கிராய் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த முஹமட் சாக்கி, பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களைச் சுமார் 1.5 மில்லியன் பேர் பயன்படுத்த முடியும் என்றார்.

“கிள்ளான் பள்ளத் தாக்கில் விற்பனை செய்ய அப்போதை பொருட்கள் மலேசியா-தாய்லாந்து எல்லையில் இருந்து கொண்டு வரப்பட்டன என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

“வேலையில்லா மூன்று சகோதரர்களும் நீண்ட காலமாக இந்த செயலை செய்து வருவதாக நம்பப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

24 வயதான சந்தேக நபர் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 15(1) (a) இன் கீழ் குற்றப் பதிவு வைத்திருப்பதாகவும் அவரது 45 வயதான சகோதரர் திரைப்பட தணிக்கை சட்டம் 2022 பிரிவு 18(5) இன் கீழ் குற்றப் பதிவு வைத்திருப்பதாகவும் முஹமட் சாக்கி கூறினார்.

“ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39பி மற்றும் விஷச் சட்டம் 1952 இன் பிரிவு 30(3) ஆகியவற்றின் கீழ் அவர்கள் இன்று தொடங்கி பிப்ரவரி 27 வரை ஏழு நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :