HEALTHNATIONAL

மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை 3.4 விழுக்காடு அதிகரிப்பு

கோலாலம்பூர், பிப் 21- நாட்டில் கடந்த பிப்ரவரி 12 முதல் 18 வரையிலான ஏழாவது நோய்த் தொற்று வாரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 100,000 பேருக்கு 3.4 விழுக்காடு என்ற விகிதாசாரத்தில் அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆறாம் நோய்த் தொற்று வாரத்தை விட ஏழாவது நோய்த் தொற்று வாரத்தில் 0.4 விழுக்காடு அதிகரித்துள்ள வேளையில் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகள் எண்ணிக்கை 20 விழுக்காடு குறைந்துள்ளது என்று சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கடுமையான பாதிப்பு இல்லாத கோவிட்-19 நோயாளிகளுக்குக் கட்டில்களின் பயன்பாடு கடந்த  ஆறாவது நோய்த் தொற்று வாரத்தை விட ஏழாவது நோய்த் தொற்று வாரத்தில் ஒரு விழுக்காடு குறைந்துள்ளது.

அதே சமயம் தீவிரச் சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள கட்டில்களின் பயன்பாடு எந்த மாற்றமும் இன்றி இரண்டு விழுக்காடாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும், செயற்கை சுவாசக் கருவியின் உதவி தேவைப்படும் நோயாளிகள் எண்ணிக்கையும் 0.2 விழுக்காடாக உள்ளது என இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

கடந்த 2020 ஜனவரி 25ஆம் தேதி முதல் 2023 பிப்ரவரி 18 வரையிலான காலக்கட்டத்தில் நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 40 ஆயிரத்து 821 ஆக  உள்ள வேளையில் 49 லட்சத்து 94 ஆயிரத்து 944 பேர் அந்நோயிலிருந்து விடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

தீவிர நிலையில் இருக்கும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை சராசரி 8,980ஆக உள்ள வேளையில் இந்நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 36,955ஆகப் பதிவாகியுள்ளது என்றார் அவர்.


Pengarang :