ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நோன்பு மாதத்தில் மக்களின் சுமையைக் குறைக்க மலிவு விற்பனை- புக்கிட் மெலாவத்தி தொகுதி ஏற்பாடு

ஷா ஆலம், பிப் 26– நோன்பு மாதத்தின் போது மக்களின் சுமையைக் குறைக்கும் விதமாக மலிவு விற்பனையை நடத்த புக்கிட் மெலாவத்தி தொகுதி திட்டமிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையை நடத்துவது தொடர்பில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம்(பி.கே.பி.எஸ்.) மற்றும் ஃபாமா எனப்படும் கூட்டரசு விவசாய பொருள் சந்தை வாரியத்துடன் தாங்கள் விவாதித்து வருவதாக புக்கிட் மெலாவத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி முகமது ஃபர்ஹான் ஜூல்கிப்ளி கூறினார்.

இந்த ஒத்துழைப்பின் வாயிலாக ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தில் விற்கப்படும் கோழி, முட்டை, மீன், உறையவைக்கப்பட்ட இறைச்சி, அரிசி மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய ஆறு பொருள்களை விற்பனைக்கு வைக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

ஃபாமா மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பதற்கான வாய்ப்பு கிட்டும். பொது மக்கள் ஒரே இடத்தில் அதிகமான பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக இவ்விரு அமைப்புகளையும் உள்ளடக்கிய விற்பனையை ஒரே இடத்தில் நடத்துவதற்கான சாத்தியத்தை தாங்கள் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி முஸ்லீம்கள் நோன்பை ஆரம்பிப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த விற்பனையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஃபாமாவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இத்தகைய திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி இவ்வாண்டும் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :