ECONOMYMEDIA STATEMENTNATIONAL

“பேக்கெஜ் பெர்பாடுவான்“ திட்டத்தின் கீழ் மலிவான விலையில் அதிவேக இணையச் சேவை

பெட்டாலிங் ஜெயா, பிப் 26- மக்களுக்கு அதிவேக அகண்ட அலைவரிசை சேவையை வழங்குவதற்காக தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து “பேக்கெஜ் பெர்பாடுவான்“ எனும் ஒற்றுமை தொகுப்புத் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தற்போது உள்ள அகண்ட அலைவரிசை சேவையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக சக்தி வாய்ந்த சேவையை பாதி விலையில் வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அதன் அமைச்சர் ஃபஹாமி ஃபாசில் கூறினார்.

வரும் பிப்ரவரி 28ஆம் தேதி வாக்கில் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு மட்டுமின்றி அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் அகண்ட அலைவரிசை சேவையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிமுகம் செய்யவுள்ளன என்று அவர் சொன்னார்.

வெறும் ஐந்து வெள்ளி கட்டணத்தில் விநாடிக்கு மூன்று மெகாபிட் வேகம் கொண்ட இந்த இணைய சேவையின் வழி 12 முதல் 30 வயது வரையிலானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும்  மூத்த குடிமக்கள் பயன் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள டி.எச். தங்கும் விடுதியில்  கெ அடிலான் கட்சியின் தகவல் பிரிவை வலுப்படுத்துவது தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

அகண்ட சேவை வழங்கும் நிறுவனமான யுனிஃபை தனது சேவைக்கான அடிப்படை கட்டணத்தை வரும் மார்ச் மாதம் 89 வெள்ளியிலிருந்து  69 வெள்ளியாக குறைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :