NATIONAL

டேஷ் நெடுஞ்சாலையில் சட்டவிரோதக் கார் பந்தயத்தில் ஈடுபட்ட இருவர் கைது

ஷா ஆலம், பிப் 28- டாமன்சாரா- ஷா ஆலம் நெடுஞ்சாலையில் சட்டவிரோதக் கார் பந்தயத்தில் ஈடுபட்ட ஒரு மெக்கானிக் உள்பட இருவரைப் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கும் 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த பந்தயம் நடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்ததாக ஷா ஆலம் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.

இந்த பந்தயத்தில் ஆறு புரோட்டோன் சத்ரியா ரகக் கார்கள் ஈடுபட்டது அந்த நெடுஞ்சாலையில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.

சட்டவிரோதப் பந்தயத்தில் ஈடுபட்ட அந்த ஆறு கார்களும் டேஷ் நெடுச்சாலையின் டெனாய் ஆலம் டோல் சாவடி முதல் பூலாவ் ஆங்சா வெளியேறும் வழித்தடம் வரை சென்று பின்னர் அதே நெடுஞ்சாலையில் எதிர்த்தடத்தில் பயணித்து டெனாய் ஆலம் டோல் சாவடிக்கு மறுபடியும் வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த பந்தயத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 20 மற்றும் 29 வயதுடைய இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் பயன்படுத்திய கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் தெரிவித்தார். இந்த பந்தயத்தில் ஈடுபட்ட இதர நபர்களைத் தேடும் நடவடிக்கையில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.

இந்த சட்டவிரோதப் பந்தயம் தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 42(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

டாமன்சாரா-ஷா ஆலம் நெடுஞ்சாலையில் உள்ள டோல் சாவடி ஒன்றின் அருகே சில புரோட்டோன் சத்ரியா கார்கள் சட்டவிரோதப் பந்தயத்தில் ஈடுபட்டதோடு எதிர்த்தடத்திலும் பயணிப்பதைச் சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.


Pengarang :