SELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்ற இந்திய ஊழியர்களுக்காகக் காதர் இப்ராஹிமின் தன்முனைப்பு பயிற்சி

ஷா ஆலம், மார்ச் 3- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் இந்தியப் பணியாளர்கள் சமூக நல அமைப்பின் (பாக்கி) ஏற்பாட்டில் தன்முனைப்பு பயிற்சி இங்குள்ள ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் மாநாடு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

நாட்டின் பிரபல தன்முனைப்பு ப் பயிற்சியாளர் பேராசிரியர் ஏ.காதர் இப்ராஹிம் அவர்களால் நடத்தப்பட்ட இந்த தன்முனைப்பு பயிற்சியில் மாநகர் மன்றத்தில் பணிபுரியும் 86 இந்திய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த தன்முனைப்பு பயிற்சி நிகழ்வை மாநகர் மன்றத்தின் நிர்வாகப் பிரிவின் துணைச் செயலாளர் அஸ்மா முகமது ஜின் தொடக்கி வைத்தார். இந்த சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த மாநகர் மன்றத்தின் இந்தியப் பணியாளர் சமூக நல அமைப்பைத் தாம் பெரிதும் பாராட்டுவதாக அஸ்மா தமதுரையில் கூறினார்.

இத்தகையப் பயிற்சிகளின் வாயிலாக மாநகர் மன்ற ஊழியர்கள் அறிவாற்றலை வளர்ப்பதற்கும் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் வாய்ப்பு கிட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊழியர்களின் ஆக்கத் திறனை மேம்படுத்துவதற்கு ஏதுவாக இது போன்ற பயிற்சிகளை வெளி இடங்களில் நடத்துவதற்குப் பாக்கி அமைப்பு ஏற்பாடு செய்யும் பட்சத்தில் அதற்கான செலவுகளை மாநகர் மன்றமே ஏற்றுக் கொள்ளும் என அவர் வாக்குறுதியளித்தார்.

முதன் முறையாக நடத்தப்படும் தன்முனைப்பு பயிற்சிக்கு உண்டான செலவுகள் அனைத்தையும் ஷா ஆலம் மாநகர் மன்றமே ஏற்றுக் கொண்டதாக மாநகர் மன்ற இந்திய ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். தங்கராஜூ தெரிவித்தார்.


Pengarang :