ALAM SEKITAR & CUACANATIONAL

நான்கு மாநிலங்களில் மோசமான வெள்ளம்- நிவாரண மையங்களில் 31,000 பேர் அடைக்கலம்

கோலாலம்பூர், மார்ச் 3- நாட்டிலுள்ள நான்கு மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி அம்மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ள 241 துயர் துடைப்பு மையங்களில் 31,375 பேர் அடைக்கலம் புகுந்துள்ளனர். நேற்று மாலை இந்த எண்ணிக்கை 29,091 பேராக இருந்தது.

ஜொகூர் மாநிலத்தில் நேற்றிரவு 8.00 மணி வரை நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்த வெள்ள அகதிகளின் எண்ணிக்கை 28,486ஆக உயர்வு கண்டது. நேற்று மாலை 26,633 பேர் மட்டுமே நிவாரண மையங்களில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்காக இம்மாநிலத்திலுள்ள 10 மாவட்டங்களில் 198 துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பகாங் மாநிலத்தில் நேற்றிரவு நிலவரப்படி 27 துயர் துடைப்பு மையங்களில் 1,769 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகலில் இந்த 25 மையங்களில் 1,373 பேர் தங்கியிருந்ததாக மாநிலப் பேரிடர் மேலாண்மை செயல்குழு தெரிவித்தது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நேற்றிவு 8.00 மணி வரை 12 நிவாரண மையங்களில் 290 குடும்பங்களைச் சேர்ந்த 1,042 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநிலச் சமூக நலத் துறையின் இன்போபெஞ்சானா அகப்பக்கம் கூறியது.

மலாக்கா மாநிலத்தைப் பொறுத்த வரை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று நண்பகல் 12.00 மணியளவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் மட்டுமே நிவாரண மையங்களில் தங்கியிருந்த வேளையில் இரவு 8.00 மணியளவில் அந்த எண்ணிக்கை 20 குடும்பங்களைச் சேர்ந்த 78 பேராக அதிகரித்துள்ளது.


Pengarang :