ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் அரசின் நிதி நிலைமை வலுவாக உள்ளது- மந்திரி புசார் அறிவிப்பு

உலு லங்காட், மார்ச் 4- அண்மைய சில ஆண்டுகளாக கிடைத்து வரும் உயர்ந்த பட்ச வருமானம் காரணமாக மாநிலத்தின் நிதி நிலைமை வலுவாக உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இதன் காரணமாக பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய எந்த விளைவையும் எதிர்கொள்ளும் திறனை அது பெற்றுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மாநிலத்தின் வருமானத்தை முறையாக வசூலிக்க க்கூடிய திறனை சிலாங்கூர அரசு கொண்டுள்ளது. கடந்தாண்டு நாம் 250 கோடிக்கு அதிகமான தொகையை வசூலித்தோம். இது கடந்த ஐந்தாண்டுகளில் வசூலானதை விட அதிகத் தொகையாகும் என்று அவர் சொன்னார்.

இந்த வருமானத்தின் வழி கிடைக்கும் சேமிப்புகளை பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டுச் சேர்க்கிறோம். பெடுலி ராக்யாட் திட்டம் தொடங்கி இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் வரையிலான முன்னெடுப்புகளை அதற்கு உதாரணமாகக் கூறலாம் என்று அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டில் சிலாங்கூர் 250 கோடியே 50 லட்சம் வெள்ளியை வசூலித்தது. ஏற்கனவே நிர்ணயித்த இலக்கை விட இது 50 கோடி வெள்ளி அதிகமாகும். கடந்த ஐந்தாண்டுகளைக் காட்டிலும் சிறந்த அடைவு  நிலையாக இது விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு உற்பத்தியில் அதிக  பங்களிப்பை அதாவது 24.8 விழுக்காட்டை வழங்கும் மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதாக இன்று இங்கு நடைபெற்ற ஜெலாஜா கித்தா சிலாங்கூர் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் சொன்னார்.


Pengarang :