ECONOMYMEDIA STATEMENT

ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் வழி ஊக்கத் தடுப்பூசி பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஷா ஆலம், மார்ச் 8- தடுப்பூசியை  நேரடியாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசி ஊக்குவிப்புத் பிரசார இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டதன் வாயிலாக ஊக்கத் தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் வரை முதலாவது ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 49.9 விழுக்காடாக மட்டுமே இருந்த வேளையில் தற்போது அந்த எண்ணிக்கை 50 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.

இரண்டாவது ஊக்கத் தடுப்பூசியைப் பொறுத்த வரை சில வாரங்களுக்கு முன்னர் 1.9 விழுக்காடாக இருந்த அத்தடுப்பூசியைப் பெற்றவர்கள் எண்ணிக்கை தற்போது 2.2 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கை மனநிறைவளிக்கும் வகையில் இல்லாவிட்டாலும் பிரசார நடவடிக்கைகளுக்கு பிறகு தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்றார் அவர்.

மக்களவையில் இன்று உலு திரங்கானு உறுப்ப்பினர் டத்தோ ரோசோல் வாஹிட் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார். ஊக்கத் தடுப்பூசிக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள ஆதரவு மற்றும் அந்த தடுப்பூசியைப் பெறுவதால் மக்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்வாண்டு ஜனவரி நிலவரப்படி கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை சீராக அதாவது 500 க்குள் இருந்த வேளையில் தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து நேற்று 226ஆக ஆகியுள்ளது என்று டாக்டர் ஜலிஹா தெரிவித்தார்.


Pengarang :