ALAM SEKITAR & CUACAECONOMY

மூன்று மாநிலங்களில் வெள்ள நிலைமை சீரடைகிறது- நட்மா தகவல்

கோலாலம்பூர், மார்ச் 8- ஜோகூர், மலாக்கா, பகாங் ஆகிய மாநிலங்கள் வெள்ளப் பாதிப்பில் இருந்து தொடர்ந்து மீண்டு வரும் வேளையில் விரைவில் அவை வெள்ளத்திற்குப் பிந்தைய கட்டத்திற்கு நுழையும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) கூறியது.

வெள்ளத்திற்குப் பிந்தைய நடவடிக்கைளை மேற்கொள்வதில் அரசு சாரா அமைப்புகள் மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்பை நட்மா நாடுவதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ கைருள் ஷாரில் இட்ருஸ் கூறினார்.

நட்மாவும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களும்  வெள்ளம் சூழ்ந்த வீடுகளை துப்புரவு செய்வது, பழுதடைந்த அடிப்படை வசதிகளை சீரமைப்பது, மற்றும் திட கழிவுகளை அகற்றுவது போன்ற பணிகளில்  கவனம் செலுத்தி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தில் பாதிக்கப் படாத மாநிலங்கள் வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவு பணிகளில் உதவ இயந்திரங்கள் மற்றும் உறுப்பினர்களை அனுப்பி உதவ முன்வந்துள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று புச்சோங்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மார்டி கார்ப்ரேஷன் சென்.பெர்ஹாட் நிறுவனம் வழங்கிய  நான்கு சக்கர இயக்க வாகனத்தைப் பெற்றுக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

வெள்ள நிலைமை சீரடைந்து வந்த போதிலும் மேடான பகுதிகளிலிருந்து வெள்ள நீர் கீழ் நோக்கி வடிவதால் சில இடங்களில் நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என அவர் விளக்கினார்.

இன்று காலை நிலவரப்படி ஜோகூர், மலாக்கா மற்றும் பகாங்கில் 43,007 பேர் தொடர்ந்து நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.  மோசமாக பாதிக்கப்பட்ட பத்து பஹாட் மாவட்டத்தில் 27,774 பேர் இன்னும் துயர் துடைப்பு மையங்களில் உள்ளனர்.


Pengarang :