ECONOMY

சிலாங்கூர் அரசின் அனைத்துலக ஹலால் மாநாடு நாளை தொடங்குகிறது

ஷா ஆலம், மார்ச் 9- உள்நாட்டு மற்றும் அனைத்துலக தொழில்துறையினர் பங்கு பெறும் இரண்டாவது சிலாங்கூர் அனைத்துலக ஹலால் மாநாடு நாளை தொடங்குகிறது.

“சிலாங்கூர்- அனைத்துலக ஹலால் நுழைவாயில்“ எனும் கருப்பொருளிலான இந்த மாநாடு கோலாலம்பூர் அனைத்துல மாநாட்டு மையத்தில் வரும் 12ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்த மாநாட்டை மதிப்புமிகு சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா நாளை காலை 10.15 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார். மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்.

வர்த்தக ஆய்வரங்கு, இஸ்லாமிய நிதி, கண்காட்சி, இணை வாணிகம், ஹலால் உணவு விநியோகம் மற்றும் இலக்கவியல் சந்தை உள்ளிட்ட ஆறு அங்கங்களை இந்த மாநாடு உள்ளடக்கியிருக்கும்.

இந்த மாநாட்டில் இணை வர்த்தகத்தின் மூலம் ஐந்து கோடி வெள்ளி வரை வர்த்தகத்தைப் பதிவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவு மற்றும் பானத் தொகுப்பு, சுகாதாரப் பராமரிப்பு, சுற்றுலா, உபசரணை உள்ளிட்ட துறைகளை இந்த  வர்த்தகம் முக்கிய இலக்காக கொண்டுள்ளது.

எண்டமிக் சூழலில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு இம்முறை  விரிவான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டையொட்டி நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்பதற்கு 200 தொழில்துறையினர் பதிவு செய்துள்ளனர்.


Pengarang :