ACTIVITIES AND ADSECONOMY

கோம்பாக் செத்தியா தொகுதியில் பிங்காஸ் திட்டத்திற்கு 250 பேர் விண்ணப்பம்

ஷா ஆலம், மார்ச் 9- பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்திற்கு  கடந்த செவ்வாய்க்கிழமை வரை 250 விண்ணப்பங்களை கோம்பாக் செத்தியா சட்டமன்றத் தொகுதி சமூகச் சேவை மையம் பெற்றுள்ளது.

அனைத்து விண்ணப்பங்களும் இணையம் வாயிலாக செய்யப்பட்ட வேளையில் அவற்றை பரிசீலிக்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக தொகுதி சேவை மையத்தின் அதிகாரி டின் யாஹ்யா கூறினார்.

கடந்தாண்டு இத்தொகுதியைச் சேர்ந்த 674 பேர் இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு மாதம் 300 வெள்ளி வழங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

இந்த திட்டத்திற்கான கோட்டா நிறைவு பெற்று விட்ட போதிலும் இத்தொகுதியில் அதிகமானோர் உதவித் தேவைப்படும் நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு மாநில அரசு சுமார் 100 பேருக்காவது இத்திட்டத்தை விரிவுபடுத்தும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த விண்ணப்ப பாரங்களில் கொடுக்கப்பட்ட விபரங்களை நாங்கள் சரிபார்க்கும் அதேவேளையில் யாவாஸ் எனப்படும் யாயாசான் அனாக்  வாரிசான் தரவுகளையும் சோதிக்கிறோம். மேலும் சரியான தரப்பினருக்கு உதவிகள் சென்று சேர்வதை உறுதி செய்ய கிராமத் தலைவர்கள் மூலமாகவும் ஆய்வினை மேற்கொள்கிறோம் என்றார் அவர்.

சிலாங்கூர் விவேக அன்னையர் பரிவுத் திட்டம் (கிஸ்) மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு கிஸ் ஐ.டி. திட்டம் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு 10 கோடியே 8 லட்சம் வெள்ளி நிதியில் இந்த பிங்காஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநில அரசின் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பில் இடம் பெற்றுள்ள 44 திட்டங்களில் பிங்காஸ் ஒன்றாகும்.  இத்திட்டத்தின் கீழ் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 300 வெள்ளி அல்லது வருடத்திற்கு 3,600 வெள்ளி இ-வாலட் வேய்பேய் செயலி மூலம் வழங்கப்படுகிறது.


Pengarang :