ECONOMYPENDIDIKAN

கனமான புத்தக பை பிரச்சனைக்கு தீர்வு காண புத்தகங்கள் இலக்கவியலுக்கு மாற்றம்- அமைச்சு திட்டம்

கோலாலம்பூர், மார்ச் 9- மாணவர்கள் எதிர்நோக்கும் கனமான புத்தகப்பை பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் பாட புத்தகங்களை இலக்கவியல் மயமாக்குவது உள்பட கல்வி முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை கல்வியமைச்சு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

எனினும், மாணவர்கள் மத்தியில் கணினி போன்ற சாதனங்கள் இல்லாதது, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இணையத் தரவு சேவை பலவீனமாக உள்ளது போன்ற பிரச்சனைகளால் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக துணைக் கல்வியமைச்சர் லிம் ஹூய் யிங் கூறினார்.

தற்போது வரை 754 பாட புத்தகங்களை டெலிமா எனப்படும் மலேசிய இலக்கவியல் கல்வித் தளத்தில் கல்வியமைச்சு பதிவேற்றம் செய்துள்ளது என்று மக்களவையில்  அவர் தெரிவித்தார்.

கனமான புத்தகப்பை பிரச்சனைக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைள் குறித்து டுங்குன் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் வான் ஹசான் முகமது ரம்லி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இது தவிர, காலை, மாலை இருவேளைகளில் செயல்படும் ஆரம்பப் பள்ளிகளில் முதலாம் படிநிலை மாணவர்களுக்கு புத்தகங்களை வைப்பதற்கான லாக்கர்களை தயார் செய்யும் திட்டமும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இப்பிரச்சனையைக் களையும் விதமாக ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டுக்கும் மேற்போதாத பயிற்சிப் புத்தகங்களைப் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையும் அமல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 


Pengarang :