ECONOMYPBT

நகர்ப்புற ஏழ்மையைக் களைவதில் ஊராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும்- பிரதமர் அறைகூவல்

கோலாலம்பூர், மார்ச் 9- நகர்புற திட்டமிடலின் போது எழும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வு காண்பதில் முனைப்பு காட்டும்படி அனைத்து ஊராட்சி மன்றங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

நகர்ப்புற மக்களின் தேவையை நிறைவு செய்வதற்கு ஏதுவாக சமநிலையான மேம்பாட்டை உறுதி செய்ய இந்நடவடிக்கை அவசியமாகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

முன்பு மேம்பாட்டை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்த காரணத்தால் நகர்ப்புற திட்டமிடலில் பல்வேறு பலவீனங்கள் காணப்பட்டன என்று அவர் சொன்னார்.

இன்னும் தாமதமாகாத போலும் நிலைமை சற்று கடுமையானதாகவே உள்ளது. நகர்ப்புறங்கள் நெரிசல்மிக்கதாகவும் நகர்புற ஏழைகள் வசிக்கும் இடங்களைக் கொண்டதாகவும் உள்ளன. திட்டமிடலில் பலவீனங்கள் உள்ளதை இது காட்டுகிறது என்றார் அவர்.

நாம் அழகிய கட்டிடங்களை நிர்மாணிக்கிறோம். நாட்டின் மேம்பாட்டிற்கு பெரிய திட்டங்கள் தேவைதான். ஆனால் அதில் வேலை செய்வோருக்கும் (மக்கள்) வீடு தேவை என்பதை நாம் மறந்து விடுகிறோம். அவர்களுக்காக மலிவு விலை வீடுகளை நிர்மாணிக்க நாம் முனையும் போது நிலத்தின் விலை உயர்ந்து விடுகிறது என்று அவர் சொன்னார்.

இங்குள்ள தாமான் தாசேக் தித்திவங்சாவில் 2023 கோலாலம்பூர் விழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தமது சிந்தையில் உருவான “மலேசியா மடாணி“ எனும் நாகரீக மலேசியா கோட்பாடிற்கேற்ப பெரிய நகரங்கள் முறையாக திட்டமிடலைக் கொண்டிருக்க வேண்டும் என்று நிதியமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :