MEDIA STATEMENTNATIONAL

ஐ.பி.ஆர். திட்டத்திற்கு இரு வாரங்களில் 24,000 விண்ணப்பங்கள்- அமைச்சர் ரபிஸி தகவல்

ஷா ஆலம், மார்ச் 9- “பெண்டப்பாத்தான் ராக்யாட்“ (ஐ.பி.ஆர்.) எனும் மக்கள் வருமானத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட இரு வார காலத்தில் 24,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி கூறினார்.

தகுதி உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவதை உறுதி செய்ய விண்ணப்பங்கள் இ-காசே  மற்றும் ரஹ்மா உதவித் தொகை பெறுவோரின் தரவு முறை வாயிலாக தீவிர பரிசோதனைக்குட்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட அகப்பக்கம் வாயிலாக சிறப்பான ஆதரவையும் வரவேற்பையும் பெற்று வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இது வரை இத்திட்டதிற்கு சுமார் 24,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களை அடையாளம் காண்பதில் மாநில அரசு மற்றும் ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பை பெறவுள்ளோம் என்றார் அவர்.

மக்களவையில் இன்று சிகாமாட் தொகுதி ஹராப்பான் உறுப்பினர் ஆர்.யுனேஸ்வேரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் மற்றும் பரம ஏழைகளின் வருமானத்தை உயர்த்துவதில் இந்த ஐ.பி.ஆர். திட்டம் எவ்வாறு  துணை புரியும் என்று அவர்  கேள்வியெழுப்பியிருந்தார்.

ஏழைகளுக்கு வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் 75 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் ஐ.பி.ஆர். திட்டம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த மாதம் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.


Pengarang :