ALAM SEKITAR & CUACAECONOMY

பத்து ஆராங் நகரின் தனித்துவத்தை பாதுகாக்க மாநில அரசு உறுதி

ஷா ஆலம், மார்ச் 10- பத்து ஆராங் நகரின் தனித்துவத்தைப் பாதுகாக்க
மாநில அரசு கடப்பாடு கொண்டுள்ளது. 2030 பண்டார் பத்து ஆராங் சிறப்பு
குடியேற்றப் பகுதி திட்டத்தின் ஆர்.கே.கே.) கீழ் இந்நகரின் பாரம்ரியம்
தொடர்ந்து கட்டிக்காக்கப்படும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
செலாயாங் நகராண்மைக் கழக ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற  சிறப்புத்
திட்ட வரைவு மீதான விசாரணை மற்றும் கருத்துக் கேட்பு  செயற்குழு  கூட்டத்தின் வாயிலாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்  படுகிறது என்று அவர் சொன்னார்.
பத்து ஆராங் மஸ்ஜிட் ஜாமேக் பள்ளிவாசலைப் பாதுகாப்பது தொடர்பான
பரிந்துரையும் அந்த விவாதத்தில் முன்வைக்கப்பட்டதாகவும், கடந்தாண்டு அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட 2030 பண்டார் பத்து  ஆராங் திட்ட வரைவை காட்சிக்கு வைக்கும் பணிக்குப் பின்னர்  மேற்கொள்ளப்படும் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக இந்த செயல்குழு   கூட்டம் அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
செலாயாங் நகராண்மைக் கழகத்தின் துணைத் தலைவர் அடி பைசால் அகமது
தர்மிஸி மற்றும் பிளான் மலேசியாவின் சிலாங்கூர் மாநில  இயக்குநர் கமாருள்ஸமான் இப்ராஹிம் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ஏழு ஆட்சேபங்களும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டதாக அவர்  குறிப்பிட்டார்.
2030 பண்டார் பத்து ஆராங் ஆர்.கே.கே. திட்ட வரைவு தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கருத்துகளையும் ஆலோசனைகளையும் தாங்கள்  வரவேற்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில்  கூறியிருந்தார்.
இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலக்கட்டம் தொடங்கி 1960ஆம்
ஆண்டுகள் வரைக்குமான காலக்கட்டத்தில் பிரசித்தி பெற்ற நிலக்கரிச்
சுரங்க நகராக விளங்கிய பத்து ஆராங் மினி தங்கக் குன்று எனவும் அழைக்கப்பட்டது.
பாரம்பரிய நகராக விளங்கும் இந்த பத்து ஆராங் நகரில் சுரங்க
நடவடிக்கைகள் நடைபெற்றதற்கு சான்றாக சுரங்கப் பாதைகள்,
புகைப்போக்கிகள் மற்றும் சிதிலமடைந்த பழைய கட்டிடங்களை
இன்றளவும் காண முடியும்.

Pengarang :