ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெறுப்புணர்வு அரசியல் இன, சமயங்களுக்கிடையே பிரிவினையை உண்டாக்கும்- ஜமாலியா ஜமாலுடின் கூறுகிறார்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 24- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலின் போது இன மற்றும் சமயங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படத்தும் அளவுக்கு வெறுப்புணர்வு அரசியல் நடத்தவதை அரசியல் கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது..

பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி  இன அரசியலை ஆரம்ப காலந்தொட்டு நிராகரித்து வந்துள்ளதோடு சிறப்பான நிர்வாக முறை மீது கவனம் செலுத்தி வந்துள்ளது என்று பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

நாட்டின் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை முதன் முறையாக வாக்களிக்கும் இளையோர் மத்தியில் ஏற்படுத்துவது தற்போதைய தலையாயப் பணியாகும் என்று அவர் சொன்னார்.

கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட மாநில அரசின் 245 கோடி வெள்ளி வரவு செலவுத் திட்டத்தில் உள்ள மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை பிரபலப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளோம். இந்த போன்ற மக்கள் நலத் திட்டங்களை வேறு எந்த மாநிலமும் மேற்கொண்டதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் பண்டார் உத்தாமா தொகுதிக்காக மட்டுமின்றி சிலாங்கூரிலுள்ள அனைத்து தொகுதிகளுக்கும் பிரசாரம் செய்யவுள்ளோம். மற்றத் தொகுதிகளில் தோல்வியைத் தழுவி சிலாங்கூரில் மட்டும் வெற்றி பெறுவதில் எந்த பயனும் இல்லை என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலத் தேர்தல் வரும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாத்தில் நடைபெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.


Pengarang :